Friday, 23 September 2022

நீடுதுயில் நீக்கவந்த நிலா


 

நீடுதுயில் நீக்கவந்த நிலா


பாட்டுக்கொரு புலவனாய் பாரினில் உதித்து/

ஏட்டுக்குநற் கவிஞனாய் எழிலாய் எழுந்து/

நாட்டுக்கொரு தலைவனாய் நிமிர்ந்தே சிறந்து/

நாட்டினார் புகழ்க்கொடி நற்றமிழால் நல்லபடி/


அறியாமை நீங்கிடவே ஆற்றல்மிகு சொல்லோவியம்/

செறிவாகத் தந்தவரே சீற்றமுடன் உரைத்தவரே/

குறிபார்த்துப் பெண்ணினத்தை கூட்டுக்குள் அடைத்தோரை/

வெறிகொண்டு விரட்டிடவே வண்டமிழ் பகர்ந்தவரே/


தளைதனில் சிக்கிநின்ற தீந்தமிழின் வீரியத்தைத்/

துளைமீண்டு தென்றலாய்த் தேனூறும் இசையாக/

முளைத்திட முட்டிநிற்கும் முற்றியதோர் விதையாக/

விளைந்தநற் புதுக்கவியாய் வியனுலகில் படைத்தவரே/


எண்ணத்தைக் காவியமாய் ஏத்திடும் எல்லோரையும்/

திண்ணிய நெஞ்சுடனே தீரமிக்க கவிவடிக்கப்/

பண்ணிய பாவலனே பைந்தமிழ்ச் சூரியனே/

எண்ணிலாக் கவிகளின்று எழுதுவதே உன்ஒளியில்... /


செந்தமிழ்ச்சுடர்

அ.செலஸ்டின் மகிமை ராஜ்

வேம்பார்

No comments:

Post a Comment