*எமக்குத் தொழில் கவிதை*
நல்லதைச் சொல்லி நானிலம் போற்றிட/
அல்லதைச் சொல்லி அறவே நீக்கிட/
சொல்லிடும் சொல்லை வெல்லும் சொல்லாய்/
சொல்லிடும் மறவரே செந்தமிழ்க் கவிஞர்/
அறத்தை வலியுறுத்தி ஆன்றதோர் வழிசமைத்து/
நிறத்தால் மொழியால் நிந்தனைச் செயல்களால்/
சிறுத்த மனத்தினராய் சிந்தைகெட்ட மானிடரைச்/
சிறுத்தையாய்ப் பாய்ந்து சீர்படுத்தும் நெறியாளர்/
அறிவுரை கூறிநல் அன்புவழி காட்டிடும்/
நெறிதனைச் செய்திட நானிலம் செதுக்கிட/
சிறியோரை உளிகொண்டு சிற்பமாய் வடித்திட/
அறிவினால் சொல்கூட்டி அணிசெய்யும் சிற்பி/
அருந்தமிழ் வீரராய் ஆக்கப்பணி செய்திட்டு/
மருந்தையும் இனியதாய் மனங்கவரத் தந்திட்டு/
பருந்தினும் மேலாகப் பாரினை வலம்வந்து/
விருந்தாய் நற்றமிழ் விழிகூட்டும் கவிஞராம்/
எமக்குத் தொழில் கவிதை...
எந்நாளும் விதைப்போம் அதை...
செந்தமிழ்ச்சுடர் அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்

No comments:
Post a Comment