Thursday, 22 September 2022

ஓட்டந்தொலைத்து ஒயிலாக வாழ்வோம்



*ஓட்டந்தொலைத்து ஒயிலாக வாழ்வோம்!*

ஆடியடங்கும் வாழ்க்கையையும் ஆறடி நிலத்தையும்/
நாடியிருக்கும் மாந்தரினம் நலமிகு வாழ்வழித்து/
ஓடியோடிப் பொருள்தேடி உருக்குலைந்து மீண்டிடாது/
கோடிநாடி ஓடுகின்ற களங்கமதை  என்செய்வோம்?/

இளமையைத் தொலைத்திட்டு இன்பமதை விடுவித்து/
வளமைமிகு வாழ்வதை வாடிடவே செய்திட்டு/
களம்பல கண்டாங்கே கருணையும் தொலைத்திட்டு/
உளநோயால்  ஓய்ந்திட்டு உட்காரா நிலையேனோ?/

வாழ்ந்திடும் ஒருமுறை வனப்புடைய வாழ்வுடன்/
தாழ்ந்திடும் நிலையிலும் தலைபணியா நடையுடன்/
வீழ்ந்திடும் நிலையிலும் வியத்தகு சீர்கூட்டும்/
சூழ்நிலைச் சிறப்பினை சூழ்கடலும் போற்றுமே.! /

தனந்தனைத் தேடித்தேடி தினந்தோறும் பரிதவிக்கும்/
மனந்தனை விட்டோடி மணங்கமழ் வாழ்வதை/
தினந்தினம் வாழ்ந்திட தித்திக்கும் ஆள்கையை/
மனந்தனில் ஏற்றுவோம் மாண்புகழ் சாற்றுவோம்! 

செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

No comments:

Post a Comment