Monday, 26 September 2022

தெரிவை என்னும் பருவம்(பெண்)




 தித்திக்கும் தெரிவை


பெண்ணின் பருவத்துள் ஆறாம் பருவமாய்/

கண்ணின் இமைபோலக் காக்கும் பருவமாய்/ 

எண்ணியன ஈடேறும் இனிய பருவமாய்/

பண்ணினை மீட்டிடும் பருவமே தெரிவை/


இல்லறம் நுழைந்திடும் இணையிலாப் பருவமாய்/

நல்லறம் நோக்கிய நலமிகு பருவமாய்/

இல்வாழ்வில் விருந்தோம்பலில் இனிமை சேர்த்து/

எல்லோரையும் மகிழ்விக்கும் ஈடிலாப் பருவம்/


தாயாய் நின்றே தரணியைத் தாங்கிடவும்/

தாரமாய் நின்று தளர்வினைப் போக்கிடவும்/

சேயினை ஈன்றவள் சீர்பெறச் செய்திடவும்/

சோர்வினைப் போக்கியே சுகந்தரும் தெரிவை/


அன்பும் அறனும் உடையதோர் இல்வாழ்வைப்/

பண்பும் பயனுமாய்ப் பொலிவுறச் செய்துநல்/

இன்பம் பொங்கிடும் இல்லறத்தின் இளமையாம்/ 

தெரிவையைப் பாடுவோம் புகழ்மாலை சூடுவோம்/


செந்தமிழ்ச்சுடர்

அ.செலஸ்டின் மகிமை ராஜ்

வேம்பார்

No comments:

Post a Comment