Thursday, 22 September 2022

ஓட்டந்தொலைத்து ஒயிலாக வாழ்வோம்



*ஓட்டந்தொலைத்து ஒயிலாக வாழ்வோம்!*

ஆடியடங்கும் வாழ்க்கையையும் ஆறடி நிலத்தையும்/
நாடியிருக்கும் மாந்தரினம் நலமிகு வாழ்வழித்து/
ஓடியோடிப் பொருள்தேடி உருக்குலைந்து மீண்டிடாது/
கோடிநாடி ஓடுகின்ற களங்கமதை  என்செய்வோம்?/

இளமையைத் தொலைத்திட்டு இன்பமதை விடுவித்து/
வளமைமிகு வாழ்வதை வாடிடவே செய்திட்டு/
களம்பல கண்டாங்கே கருணையும் தொலைத்திட்டு/
உளநோயால்  ஓய்ந்திட்டு உட்காரா நிலையேனோ?/

வாழ்ந்திடும் ஒருமுறை வனப்புடைய வாழ்வுடன்/
தாழ்ந்திடும் நிலையிலும் தலைபணியா நடையுடன்/
வீழ்ந்திடும் நிலையிலும் வியத்தகு சீர்கூட்டும்/
சூழ்நிலைச் சிறப்பினை சூழ்கடலும் போற்றுமே.! /

தனந்தனைத் தேடித்தேடி தினந்தோறும் பரிதவிக்கும்/
மனந்தனை விட்டோடி மணங்கமழ் வாழ்வதை/
தினந்தினம் வாழ்ந்திட தித்திக்கும் ஆள்கையை/
மனந்தனில் ஏற்றுவோம் மாண்புகழ் சாற்றுவோம்! 

செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

சங்கத்தமிழ்ச் செல்வம்


*சங்கத் தமிழ்ச் செல்வம்*

வங்கக் கடலின் வனப்பிடை உதித்து/
 சிங்கம் அனையவே சீர்பெற்றுச் சிறந்து/
தங்கம் போலவே தணலிலும் உறைந்து/
எங்கும் நிறைபவள் எங்கள் தமிழ்த்தாய்/

முச்சங்கம் பிறந்து மூவேந்தரிடை வளர்ந்து/
எச்சங்கத் துள்ளும் எதிர்வாதம் புரிந்து/
கச்சிதமாய் எழுந்து காசினியில் நிமிர்ந்து/
 உச்சிநின்று ஒளிகூட்டி உலகாளும் சங்கத்தமிழ்/

பதிற்றுப் பத்துடன் புறநானூறாய்ப் புறங்கொண்டு/
அதிசிறந்த நற்றிணையொடு ஐந்துநூல் அகங்கொண்டு/
பதிசிறந்த சேயோனுடன் பரிபாடலில் இருபொருளும்/
கதியாகப் பெற்றதே கவின்மிகு எட்டுத்தொகை/

ஆற்றொணா மாந்தரை ஆற்றிடவே எழுந்திட்ட/
ஆற்றுப்படை நூல்களொடு ஐயிரண்டு பாட்டாகத்/
தோற்றமுடை பத்துப்பாட்டாய்த்  திக்கெட்டும் புகழ்கொண்ட/
ஏற்றமுடை எங்கள்தமிழ் என்றென்றும் வாழியவே! 


செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

Monday, 19 September 2022

கலாச்சாரத்தில் தொடுப்போம் கவிச்சரம்

*கலாச்சாரத்தில் தொடுப்போம் கவிச்சரம்*

கலைகளால் அணிசெய்து காவியம் ஆக்கியே/
சிலைகளால் சீர்மிக்க சிந்தனையால் தேக்கியே/
அலைகளாய் சொல்கோத்து அடுக்கிய நூல்களால்/
மலைபோல உயர்ந்ததே மறத்தமிழ்க் கலாச்சாரம்/

அன்னையுடன் தந்தையின் அன்பிலே உதித்தது/
தன்னையே மிஞ்சிடத் தனிவழி காட்டிடும்/
அண்ணலாம் ஆசானின் அருள்வழி நடத்தலில்/
எண்ணரும் சிறப்பினால் ஏற்றமிகப் பெற்றதே/

உறவுப் பாலங்களால் உணர்வுக் கட்டமைத்து/
மரபின் வேலிகளால் மங்காத நெறியமைத்து/
உறவைப் பேணிடவே விழாக்கள் பலஅமைத்து/
துறவும் போற்றிட்ட தூயதமிழ் கலாச்சாரம்/

செம்புலப் பெயல்நீராய் சொந்தத்தை உருவாக்கி/
இம்மையில் இவளேயென இறுக்கிய முடிச்சிட்டு/
எம்மாந்தரும் வியப்பினிலே ஏறிட்டுப் பார்த்திடும்நல்/
செம்மாந்த கலாச்சாரச் செழுந்தமிழர் வாழியவே/ 

செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

வேற்றுமையில் ஒற்றுமை


வேற்றுமையில் ஒற்றுமை


தள்ளாடும் நிலையில் தவித்திடும் ஒருவனும்

துள்ளிடும் நிலையில் துடித்திடும் ஒருவனும்

வெள்ளமாய் மடைதிறந்து விளம்பிடும் ஒருவனும்

பள்ளமாய் தாழ்ந்திட்டு புலம்பிடும் ஒருவனும்


கள்ளத்தை அகங்கொண்ட கறையுடை ஒருவனும்

உள்ளத்தை வெண்மையாய் உரித்தாக்கும் ஒருவனும்

தெள்ளிய சிந்தனையால் திசைகாட்டும் ஒருவனும்

முள்ளாகச் சிந்தித்து முடக்கிடும் ஒருவனும்


உள்ளத்தால் ஒன்றுபட்டு உலகத்தால் ஒன்றிணைந்து

வெள்ளைமணம் கொண்டிங்கு வியத்தகு செயல்களாலே

வள்ளைப்பாட்டு பாடிடும் வனப்புமிகு உழத்தியர்போல்

புள்ளாகப் பறந்திங்கே பூங்குயிலாய் உலாவருவர்


அள்ளக்குறையா அமுதமென ஆற்றல்சேர் கல்விதனை

தள்ளாடிடும் பருவத்திலும் தாங்கிநிற்கும் செல்வந்தனை

அள்ளியள்ளித் தந்திடும் அழகியதோர் கல்விக்கூடமாம்

பள்ளியே வேற்றுமையில் ஒற்றுமைக்கு உறைவிடமாம்


செந்தமிழ்ச்சுடர் அ.செலஸ்டின் மகிமை ராஜ்

வேம்பார் 


 

Sunday, 18 September 2022

எமக்குத் தொழில் கவிதை


 *எமக்குத் தொழில் கவிதை*


நல்லதைச் சொல்லி நானிலம் போற்றிட/

அல்லதைச் சொல்லி அறவே நீக்கிட/

சொல்லிடும் சொல்லை வெல்லும் சொல்லாய்/

சொல்லிடும் மறவரே செந்தமிழ்க் கவிஞர்/


அறத்தை வலியுறுத்தி ஆன்றதோர் வழிசமைத்து/

நிறத்தால் மொழியால் நிந்தனைச் செயல்களால்/

சிறுத்த மனத்தினராய் சிந்தைகெட்ட மானிடரைச்/

சிறுத்தையாய்ப் பாய்ந்து சீர்படுத்தும் நெறியாளர்/


அறிவுரை கூறிநல் அன்புவழி காட்டிடும்/

நெறிதனைச் செய்திட நானிலம் செதுக்கிட/

சிறியோரை உளிகொண்டு சிற்பமாய் வடித்திட/

அறிவினால் சொல்கூட்டி அணிசெய்யும் சிற்பி/


அருந்தமிழ் வீரராய் ஆக்கப்பணி செய்திட்டு/

மருந்தையும் இனியதாய் மனங்கவரத் தந்திட்டு/

பருந்தினும் மேலாகப் பாரினை வலம்வந்து/

விருந்தாய் நற்றமிழ் விழிகூட்டும் கவிஞராம்/

எமக்குத் தொழில் கவிதை... 

எந்நாளும் விதைப்போம் அதை...


செந்தமிழ்ச்சுடர் அ.செலஸ்டின் மகிமை ராஜ்

வேம்பார்

Saturday, 17 September 2022

தந்தை பெரியார்

 தந்தை பெரியார்

மாயோனின் மகத்துவம்

புண்ணியந்தரு காசியினிலே புனிதராய் உதித்து/
கண்ணியமிகு கடவுளரையும் கடிந்தே எதிர்த்து/
பெண்ணியம் போற்றிட்ட பெருமைமிகு மாமணியே/
திண்ணிய போராட்டங்களால் தீரரான நன்மணியே/

திராவிடக் குழந்தையாம் தெலுங்கதனைப் பேசினாலும்/
தீர்ந்திடா அன்புடைய தமிழன்னையின் ஆசியோடும்/
ஆர்த்திடும் சிந்தனையால் ஆன்றதோர் முன்னெடுப்பால்/
கோர்த்திட்ட சீர்திருத்தம் குவலயத்தால் போற்றப்படுதே/

தீண்டாமைக்குத் தீவைத்து தீவிரமாய் எதிர்த்தவரே/
ஆண்டவர்களின் அடக்குமுறை அடியோடு மிதித்தவரே/
மாண்டிடும் நிலைமட்டும் மரியாதைக் குறைவிலாது/
மீண்டிடத் தூண்டியவரே  மேன்மையுற வேண்டியவரே/

சாதியென்னும் சாக்கடையுடன் சமத்துவமிலாச் சதிபடைத்த/
சிறியாரை முடக்கிடவே  சீற்றமுடன் எழுந்தவரே /
பெரியாராய் நின்றிலங்கி பீடுறவே நிமிர்த்திட்டு/
புரிந்திட்ட சாதனைகளால் புவியுள்ளவரை  வாழ்வீரே.! /

*செந்தமிழ்ச்சுடர்* அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்

Thursday, 15 September 2022

வறுமை ஓட்டி வளமை கூட்டுவோம்

 காணொளியும் கவிவரியும் 


வறுமை ஓட்டி வளமை கூட்டுவோம்


உண்டிதனைக் கொடுத்தோர் உயிரினைக் கொடுத்தோராய்/ 

கண்டித்துக் கூறிநின்ற கடந்திட்ட காலத்தவராய்/ 

பண்டியை நிரப்பிடப் பாடுபட்ட நாட்கள்போய்/

கண்டவிடம் வீசிநிற்கும் கயவர்களை என்செய்ய.../


எலும்புடன் தோலொட்டி எழவியலா மாந்தர்களாய்/ 

உலுக்கிடும் நிலைதந்து உருக்குலைக்கச் செய்தவராய்/

பலுகியே பெருகிடவும் பங்கிடவும் உணவில்லா/

வலுவற்ற மாந்தர்களும் வாழ்கின்ற உலகமிது/


வலியவராய் உடல்வளர்க்கும் வல்லவர்கள் ஒருபக்கம்/

மெலியவராய் உருக்குலைந்து மடிபவர்கள் மறுபக்கம்/

பலியிடும் நிலைமீட்டு பசியினைப்  போக்கிடவே/

புலியெனப் புறப்படுவீர் புரட்சிசெய் தோழர்களே/


இருப்பவர் கொடுத்து இல்லாரை நிரப்பாவிடினும்/ 

இருப்பதை வீணாக்காது இனியதோர் நிலைகொண்டால்/

பொருப்பாய் மண்ணிலே பீடுறவே நிமிர்ந்து/ 

வறுமையை ஓட்டலாம் வளமையைக் கூட்டலாம்/


செந்தமிழ்ச்சுடர்

அ.செலஸ்டின் மகிமை ராஜ்

வேம்பார்