Thursday, 19 May 2022

மும்மொழித் தமிழே

 

*மும்மொழித் தமிழே*

முத்தமிழாய் இயல் இசை நாடகமென/
முக்கனியாய் மா பலா வாழையென/
முப்பாலாய் அறம் பொருள் இன்பமென/
முக்காலமாய் நேற்று இன்று நாளையென/

மும்மொழியாய் தனி தொடர் பொதுமொழியென /
எம்மொழியும் பெறா எழிலைப் பெற்றவளே/
தொகைமொழியுள் நின்றே தொன்மை காத்தவளே/
பகைமொழியின் முன்னே பரிவை வளர்த்தவளே/

முந்நீர் கடந்தும் முகிழ்த்தே நின்று/
செந்நீர் சொறிந்தும் செம்மை காத்து/
கண்ணீர்  களைந்து காவியம் படைத்து/
திண்ணிய நெஞ்சுடன் திசைகாட்டிய தீந்தமிழே/

ஆண்டுகள் பல்லாயிரம் அற்புதமாய்க் கடந்து/
பாண்டியன் மகளாய்ப்  பாங்குற நடந்து/
ஆண்டவன் நாவிலும் அமுதமாய்  உறைந்து/
தாண்டவ மாடிடும் தனித்தமிழே வாழியவே/

செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்

Monday, 9 May 2022

பெண்களே,விழிப்போடு இருங்கள்...

 *👍🏽காவல்துறையின் எச்சரிக்கை💪🏼*


 இந்திய தண்டனைச் சட்டம் 233ன் படி



ஒரு பெண் ஏதாவதொரு சூழ்நிலையில்  கயவர்களிடம் மாட்டிக் கொண்டால்   அவள் பாலியல் வன்கொடுமைக்கோ அல்லது வேறுவிதமான துன்பங்களுக்கோ,ஆட்பட நேரலாம், அதற்கான வாய்ப்புக்களும் அதிகம்...

 

தன்னைத் தாக்கியவரைத் திருப்பித் தாக்கி மரணம் ஏற்படுத்த அப்பெண்ணுக்கு உரிமை உண்டு, அப்படிச் செய்யும் பட்சத்தில், அச் செயல் கொலைக் குற்றமாகாது...


இக்கட்டான இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சமயோசிதமாகத் தப்பிக்க சிலவழிகள்...


 1) இரவு வெகுநேரம் உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள லிப்ட்டில்  ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனியாகச் செல்ல நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும் ?


  *நிபுணர்கள் கூறுகிறார்கள்*


நீங்கள் பல தளங்களைத் தாண்டி உங்கள் தளத்தை அடைய வேண்டும் , நீங்கள் சேருமிடம் வரை உள்ள அனைத்து தளங்களிலும் நின்று செல்லுமாறு அனைத்து பட்டன்களையும்  அழுத்தவும்.

ஒவ்வொரு தளத்திலும் நின்று செல்லும் லிஃப்டில் யாரும் உங்களைத் தாக்கத் துணிவதில்லை ...


2)  நீங்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது அந்நியன் உங்களைத் தாக்க முயன்றால் என்ன செய்வது ...


*நிபுணர்கள் கூறுகிறார்கள்*

 சமையலறைக்கு ஓடுங்கள்,

மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கத்தி, தட்டு, இவை எங்கு இருக்கும்  என்று உங்களுக்குத் தெரியும்,

இவை அனைத்தையும் கொடிய ஆயுதங்களாக மாற்றலாம்,

வேறு ஒன்றுமே இல்லை என்றாலும், தட்டுக்களையும் பாத்திரங்களையும் வீசத் தொடங்குங்கள்.


 அவர்களை எதிர்த்து கூச்சல் போடுவதால் உண்டாகும் சத்தம் ஒரு கொடுமைக்காரனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.... 


அவன் பிடிபட விரும்பமாட்டான் என்பதால் அவன் தப்பிக்கவே முயல்வான்...


3) இரவில் ஆட்டோ அல்லது டாக்ஸியில் செல்லும்போது:


  *நிபுணர்கள் கூறுகிறார்கள்* 


 இரவில் ஆட்டோவில் ஏறும் முன், முதலில் அதன் பதிவு எண்ணை செல்லில் பதிவு செய்தபின்

 உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பரை அழைக்கவும்,

 டிரைவருக்குப் புரியும்படி  வீட்டாரிடம் விவரங்களை கூறவும்....

 உங்கள் அழைப்பிற்கு யாரும் பதிலளிக்காவிட்டாலும், நீங்கள் உரையாடலில் இருப்பது போல் பாசாங்கு செய்யுங்கள் ... தம்மைப் பற்றிய விவரங்கள் அனைத்தும்  உங்களிடம் இருப்பதை ஓட்டுநர் அறிந்துகொள்வார்,

 ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை உணரும் டிரைவர்

உங்களைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்வது இப்போது அவர் பொறுப்பு என்று உணர்ந்து தாக்கும் எண்ணத்தை கைவிட்டு இப்போது உங்கள் உண்மையான பாதுகாவலராக மாறிவிடுவார்.


4)  ஓட்டுனர் பாதையை மாற்றினாலோ, அல்லது

 நீங்கள் ஆபத்து மண்டலத்திற்குள் நுழைவது போல் உணர்ந்தாலோ என்ன செய்வது ...


*நிபுணர்கள் கூறுகிறார்கள்*


உங்கள் பையின் கைப்பிடி அல்லது துப்பட்டாவில் அவரின் கழுத்தில் சுற்றி அவரைப் பின்னால் இழுக்கவும்.

சில நொடிகளில், அவர் மூச்சுத் திணறல் மற்றும் உதவியற்றவராக உணருவார் ...

உங்களிடம் பை அல்லது சால்வை இல்லையென்றால், அவரது சட்டைக் காலரை  பிடித்து இழுக்கவும்.  அவரது சட்டையின் மேல் உள்ள பட்டனும் அவன் கழுத்தை நெறிப்பதால், அவர் நிலை தடுமாறும் வேளையில் நீங்கள் தப்பித்து விடலாம்.


5) ஒரு அந்நியன் இரவில் உங்களைப் பின்தொடர்ந்தால் ...?


*நிபுணர்கள் கூறுகிறார்கள்*


அருகாமையில் இருக்கும் கடை அல்லது வீட்டிற்குள் நுழைந்து உங்கள் நெருக்கடியை விளக்குங்கள்,

இரவில் கடைகள் திறக்கப்படாவிட்டால்,

 ஒரு ஏடிஎம் மையத்திற்குள் செல்லுங்கள்... ஏடிஎம் ல் எப்பொழுதும் க்ளோஸ் சர்க்யூட் கேமரா இருக்கும்;

அடையாளம் கண்டுகொள்வோம், என்ற பயத்தில்  உங்களைத் தாக்கத் துணியமாட்டார்கள்...


 *உங்கள் கைப்பையில் எப்போதும் ஒரு விசில் வைத்திருங்கள் , ஆபத்து சமயத்தில் அதை ஊதும் போது சைகலாஜிகலாக  விசில் சத்தத்திற்கு யாருமே பயப்படுவார்கள்...*

 *“அனைத்திற்கும் மேலாக"*


*மனதளவில் விழிப்புடன் இருப்பது முக்கியம்*


*உங்களிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம் உங்களின் தைரியம்*


சமூக மற்றும் தார்மீக நோக்கத்திற்காகவும், பெண்களின் பாதுகாப்பிற்காகவும் நாம் செய்யக்கூடியது, இத்தகவலைப்  பகிர்வது மட்டுமே ...


🌹நட்புக்களே, இதை நம்  தாய்மார்கள், சகோதரிகள், மனைவி, மற்றும் தோழிகளுக்கும் தெரியப்படுத்துங்கள்...🙏🏼


Friday, 8 May 2020

மூன்றாம் உலகப் போர் - அனுபவம்

மூன்றாம் உலகப்போர்
கவிப்பேரரசு - வைரமுத்து

இயற்கையோடு மனிதர்கள் நடத்தும் போர்...
நிலத்தோடு, நீரோடு, காற்றோடு நடத்தும் போர்...
கல்லில் முட்டினால் வலி யாருக்கு...?
கல்லுக்கு இல்லையே...
அதுபோலத்தான் #இயற்கையும்...
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த விவசாயி தற்கொலைகளுக்குக் காரணம்

#புவிவெப்பமாதல்
#தாராளமயமாக்கல்
#தனியார்மயமாக்கல்

நம்ப முடிகிறதா... ?

விவசாயிகளின் வாழ்வை அவலங்களை அழகுற வடித்து, முன்மாதிரி கிராமம் உருவாக்கி, இந்தியாவின் முதுகெலும்பை(கிராமம்)  நிமிரச் செய்து, எதிர்கால விவசாயி, விவசாயம் எப்படி இருக்கவேண்டுமென இலட்சியக் கருத்துகளை விதைத்துள்ளார் #கவிப்பேரரசு_வைரமுத்து_அவர்கள்...

கருத்தமாயி-சிட்டம்மா தம்பதியினரின் அட்டணம்பட்டி கிராமத்து விவசாய வாழ்க்கை... மகன் முத்துமணியின் கேடுகெட்ட வாழ்க்கை...  மகன் சின்னப்பாண்டியின் (விவசாயக் கல்லூரி மாணவன்) முன்மாதிரி வாழ்க்கை...  அவனுக்கு தூண்டுகோலாக அமரிக்கப்பெண் எமிலி, சப்பானிய இளைஞன் இஷிமுரா..,  கிராமத்து வாழ்க்கையூடே அகில உலகையும் அளந்துகாட்டுகிறார் கவிப்பேரரசு...

பூமிய சாமின்னு சொல்லும் நாமதான் ரசாயன உரம் போட்டு சாமியவே கொல்லுறோம்.. .
வெடிகுண்டு தயாரிப்பில் மிச்சப்பட்ட உப்புகளை கொட்டுவதற்கு உருவாக்கப்பட்ட மண்சந்தை முதல் மண்புழு உரம் தயாரித்தலில் ஒவ்வொரு படிநிலையும் மிக நேர்த்தியாக ...

விவசாயி, விவசாயத்தை நேசிப்போர் அனைவருக்கும் இந்நூல் ஓர் கலைக் களஞ்சியம்...

முதல் 150 பக்கங்கள் படிக்க 7 நாட்களும் அடுத்த 250 பக்கங்கள் படிக்க ஒருநாள் முழுமையும்... படிக்கப்படிக்க அவ்வளவு ஈர்ப்பு...

சொந்த நூல்கள் படிக்கையில் இருக்கும் வேகத்தைவிட, இரவல்நூல் அதிக வேகமெடுக்கிறது...

இரவல் தந்த அண்ணன் #அ.தி.தாமஸ் அவர்களுக்கு நன்றி...

நீங்களும் வாய்ப்பு இருந்தால் நிச்சயம் ஒருமுறையாவது #மூன்றாம்_உலகப்_போர் படியுங்கள்...
மீண்டும் படிக்கத் தூண்டும்...

ஓர் #வெற்றிப்படம் பார்த்த நிறைவு...

Friday, 1 May 2020

வாசிப்பை வெறுப்போம் படிப்பை நேசிப்போம்...

வாசிப்பை வெறுக்கிறேன்
படிப்பதை விரும்புகிறேன்

தனித்தமிழ் அறிவோம்

செந்தமிழ்த்தேன்
🍇🍇🍇🍇🍇🍇🍇

துளி : 65

தமிழன்பரே,
வணக்கம்.

                   Reading

என்றால் தமிழில் என்ன?

    படித்தலா? வாசித்தலா?

       He reads newspaper.

என்பதை,

"அவன் செய்தித்தாள் வாசிக்கிறான்"
என்பதா?,
"அவன் செய்தித்தாள் படிக்கிறான்"
என்பதா?

தமிழாசிரியர் சிலர் "நீ எழுந்து இதை வாசி" என்று மாணவரிடம் கூறுவதை வகுப்புகளில் கேட்கலாம்.

'வாசி' என்பது தமிழ் வினைச்சொல்லா?

தமிழர்கள் சுவடிகளைப் படித்தார்களா?வாசித்தார்களா?

அவர்கள் வாசித்திடாமல் படித்தார்கள்;ஓதினார்கள்.

 வாசித்தல் என்னும் சொல்லே தமிழில் அந்நாளில் இல்லை.

He reads book.
He studies in school.
He learns a language

மேற்கண்ட தொடர்களை,

அவன் புத்தகம் படிக்கிறான்.
அவன் பள்ளியில் பயில்கிறான்.
அவன் ஒரு மொழி கற்கிறான்.

என்று பொருத்தமாக மொழிபெயர்க்காமல்,

அவன் புத்தகம் படிக்கிறான்.
அவன் பள்ளியில் படிக்கிறான்.
அவன் ஒரு மொழி படிக்கிறான்

என்று பொதுவாகச் சொல்லிவிடுகிறோம்.

இப்படி மூன்றையும் படித்தல் என்றே வழங்கிய நமக்கு,
வேறுபடுத்திக் காட்ட வேண்டிய இடத்தில் குழப்பம் எழுகிறது.

ஒருநூலை மேலோட்டமாக,ஓசை குறைத்தோ கூட்டியோ படிக்கிறோம்.

மற்றொருநூலை
வகுப்பறையில் பலர் உடனிருக்க ஆசிரியர் உதவியுடன்
பயில்கிறோம்.

பிறிதொன்றை அரிதின் முயன்று கற்கிறோம்.


இம்மூன்று செயல்களுக்கும் ஆங்கிலத்தில் வெவ்வேறு சொற்கள் இருக்க,தமிழில் மட்டும் ஏன் படித்தல் என்னும் ஒரே சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இளைய தலைமுறைக்கு
ஏற்பட்டது.

நம்மிடம் இருப்பதை அறிய முயலாமல், புதுச்சொல் தேடும்போதுதான், புழைக்கடை வழியாகப் பிறமொழிச்சொற்கள் தமிழில் புகுந்து விடுகின்றன;அல்லது புகுத்தப்படுகின்றன.

அவ்வாறுதான்,
'read என்றால் வாசி'
என்று, வடமொழிச்
சொல்லொன்று இடம்பார்த்து நடப்பட்டது.

'வாசி' என்னும் வடசொல்லே வாசனை(படிப்பு வாசனை),வாசித்தல்,வாசிப்பு,வாசகம்,வாசகன்,வாசக சாலை,வாசகர் வட்டமாக விரிந்து ,'படி'யின் இடத்தைப் பிடித்ததுடன்,தமிழ்போல் நடித்தும் நிற்கிறது.

'வாசி' என்பதன் வரலாற்றைக் காண்போம்.

'வாசி' என்பதன் வேர்ச்சொல் சம்ஸ்க்ருதத்தின் வச்சஹ் - वचः - vachaH என்பதாகும்.இதன் பொருள் 'சொல்'(word)ஆகும்.

அச்சொல் நீண்டு,

வாச்சம் - वाचं - vaachaM
வாச்சஹ் - वाचः - vaachaH
வாச்சக - वाचक - vaachaka
வாச்சனாலய - वाचनालय - vAchanAlaya
வாச்சா - वाचा - vaachaa

எனப் 'பேசுபவர்' தொடர்பாக விரிந்து கொண்டே போகும்.

இங்கிருந்துதான் 'வாசி' என்ற வடமொழிச் சொல் உருவாக்கப்பட்டது.

சம்ஸ்க்ருதம் கூட 'read' எனபதை 'பட்' ( पठ् - patt) என்றுதான் கூறுகிறது.இது தமிழின் 'படி' என்பதோடு ஒத்துப்போவதும் காண்க.ஆனால், தமிழரோ வாசி என்னும் சொல்லை, வலிந்து வரவழைத்துப் பயன்படுத்தி வருவதை என் சொல்ல?

வாசி என்னும் புதுச்சொல், தமிழ்வளர்ச்சிக்கு நல்லதுதானே என்போர்,'கனி இருக்கும்போது காய் எதற்கு?' என்பதை எண்ணுதல் வேண்டும்.

வழிவழி வந்த பழந்தமிழ்ச்சொல்லை மறந்துவிட்டு,
இடையில் புகுந்த வடமொழிச்சொல்லை விரும்புதல் மடமை அல்லவா?

வழிவழிவந்த பழஞ்சொல் எது?

இலக்கணம் கண்ட தமிழர் வாழ்வில் 'ஓதல் பிரிவு' என்று ஒன்று உண்டு.

"ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன" - தொல்காப்பியம்.

தலைமகன் கல்வி கற்பதற்காகத் தலைமகளைப் பிரிந்து செல்வது ஓதல்பிரிவு.

அந்நாட்களில் சுவடிகளை உரக்கப் படித்தல் வழியாகக் கற்றதாலேயே கல்வி, 'ஓதல்' எனப்பட்டது.

நீதிநூல்களும் நூல்களை வாய்விட்டுப்
படிப்பதை 'ஓதுதல்' என்றே கூறுகின்றன.

'ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்' - உலகநீதி.
"ஓதுவது ஒழியேல்" - ஆத்திசூடி.

மேலும்,சமயங்களும் வாய்விட்டுப் படிப்பதை ஓதுதல் என்றே குறிக்கின்றன.

நான்மறைகள் மறையோரால் ஓதப்படுகின்றன.

சிவத்திருக்கோவில்களில் பன்னிரு திருமுறைகள் ஓதுவார்களால் ஓதப்படுகின்றன.

முகமதியர்கள் தம் சமயநூலாம் அல்குர்ஆனை ஓதவே செய்கின்றனர்.

வாய்விட்டுப் படித்தலே ஓதுதல்.வாய்க்குள்ளே படித்தலும் உண்டு.

தமிழின் உறவான கன்னடமும் read,study இரண்டையுமே 'ஓது' ( ಓದು - oOdhu) என்றே வழங்குதல் காண்க.

பிற்கால ஔவையார் ஒருவர் 'நீட்டோலை வாசியாநின்றான்' என்றார்.

அத்தகையோர் செயலால்,படித்தல்,ஓதுதலின் இடத்தை 'வாசித்தல்' பிடித்துக் கொண்டது.

இவ்வரலாற்றைத் தெரிந்து கொண்ட நாம்,இனிமேலாவது வாசித்தலை மறுத்துப் படித்தலைப் பாராட்டுவோம்.ஓதலையும் காதலுடன் பயன்படுத்துவோம்.

எழுதுபவனைப் படைப்பாளி என்பதுபோல், வாசகனைப் படிப்பாளி என்றும் வாசகசாலையைப் படிப்பகம் என்றும் வழங்கிடத் தமிழின் கறை விலகும்.

 Reading,Studying,ஆகிய இரண்டையுமே, 'படித்தல்' என்னும் ஒற்றைச்சொல்லால் குறிப்பதால் ஒன்றும் குறைந்து விடாது.

ஆனால்,Reading என்பதற்குப் படித்தல், ஓதுதல் என்பனவற்றை மறந்து,வாசித்தல் என்னும் வேற்றுமொழிச் சொல்லைப் பயன்படுத்தினால்,தமிழின் தூய்மையும் சீர்மையும் குன்றுவது உறுதி.

நன்றி.

              அன்புடன்,
        மனோ.சேவியர்,
            மணப்பாடு,
            01.05.2020.

Monday, 27 April 2020

"சுகாதாரம்" வேண்டாம் .. "நலவாழ்வு" போதும்

தனித்தமிழ் அறிவோம்
"சுகாதாரம்" வேண்டாம் .. "நலவாழ்வு" போதும்
செந்தமிழ்த்தேன்
🍇🍇🍇🍇🍇🍇

துளி : 64

தமிழன்பரே,
வணக்கம்.

           சுகாதாரம்

   இன்று, எங்கு பார்த்தாலும் சுகாதாரம் என்னும் சொல்லே, திரும்பத் திரும்ப ஊடகங்களில் முன்னிறுத்தப்படுகிறது.

     அது என்ன சுகாதாரம்?

  'Health' என்பதை 'சுகாதாரம்' என்று, யாரோ எப்போதோ மொழி பெயர்த்துச் சொன்னால்,ஆராயாமல் அப்படியே பின்பற்றுவது, தமிழுக்குச் செய்யும் நன்மையாகாது.

  ஒருசொல்லைத் தமிழில் மொழிபெயர்க்கச் சொன்னால், அதை வடமொழிப்படுத்துவோரை என்ன சொல்வது?

 இது அறியாமையயும்  ஏமாற்றும் ஆகும்.

       Health என்பதை சுகாதாரம் என்று வடமொழியில்தான் வழங்க வேண்டுமா?

     எல்லாருக்கும் விளங்குகின்ற,வாயில் நுழையக்கூடிய,குழப்பமில்லாத,மிகப்பொருத்தமான, பொருள்பொதிந்த,சிறிய,இனிய,எளியசொல் நம் அன்னைத்தமிழில் இல்லையா?இருக்கிறது.

அப்புறம் எதற்காக இந்தத் தெளிவில்லாத சுகாதாரம்?

சுகாதாரம் எப்படி வந்தது என்பதைக் காண்போம்.

ஸுக + ஆதார = ஸுகாதார.

'ஸுக'  (सुख - sukha) என்னும் வடமொழிச் சொல்லுக்கு இன்பம் (happiness,pleasure) என்பது பொருள்.

'ஸுக' என்பதைப் புகுத்தும்போது தமிழ் இலக்கணம் ஏற்றுக் கொள்ளாதே.

பெயர்ச்சொல்லின் இறுதியில் அ என்னும் ஓசை இருப்பதை அது விரும்பாது.

எப்படி  (ஏ)மாற்றுவது?

இறுதியில் ஒரு ம் சேர்த்து விட்டால் ,

ஸுக + ம் = ஸுகம்.

அப்பாடா.

சுகம் ஆகிவிட்டதால்  அது தமிழாகி விடுமா?

இனி,

ஆதாரத்திற்கு வருவோம்.

'ஆதார' - आधार -Aadhaara  - என்றால் அடிப்படை, அடித்தளம்,உறுதுணை (base,foundation,support) என்பன பொருள்.

ஆதார + ம்= ஆதாரம் ஆனதால் 'ஆதாரம்' என்பதும் தமிழாகிவிடாது.

இவ்வாறாக,இரண்டு சம்ஸ்க்ருதச் சொற்கள் இணைந்து,

சுக(ம் )+ ஆதாரம் = சுகாதாரம் ஆயிற்று.

அஃதாவது,

இன்பம் + அடிப்படை = இன்ப அடிப்படை.

சுகாதாரம் என்றால் ' இன்பத்திற்கு  அடிப்படை' என்று பொருளாகிறது.

வடமொழியறிந்த முன்னோர்,

    'ஸுத்தம் ஸுகாதாரம்'

என்ற அழகிய கருத்தொன்றை ஆத்திசூடி போல் வடமொழியில் வலியுறுத்தியுள்ளனர்.

அஃதாவது,

"சுத்தமே சுகத்திற்கு ஆதாரம்".

(ஷுத்த - शुद्ध - shudhdha -என்னும் வடமொழியோடு ம் சேர்ந்திட சுத்தம் ஆனது.ஆனதால்,'சுத்தம்' தமிழ்ச்சொல் ஆகிவிடாது)

"தூய்மையே இன்பத்திற்கு அடிப்படை" என்னும் தமிழ்க்கருத்தைத்தான்,

  "சுத்தம் சுகாதாரம்"  -என்று வடமொழியில் சொன்னார்கள்.

இதையறியாத நம்மில் பலர் 'சுத்தமாகவும் சுகாதாரமாகவும்' என்று பொருள்புரியாமல் சொல்லிக்கொண்டு வருகிறோம்.அது தவறு.

ஒருவழியாக 'Health' என்பதை 'சுகாதாரம்' என்று வடமொழியாக்கிவிட்டார்கள்.

வடமொழியாரே Health என்பதை 'ஸ்வஸ்த்' (स्वस्थ) / 'ஆரோக்ய' (आरोग्य) என்றுதான் கூறுவர்.ஆனால் ,அதை 'சுகாதாரம்' என்று பொருத்தமில்லாமல்  நாம் கூறுவதைக் கேட்டால்,அந்த வடமொழியாரே வாய்விட்டு நகைப்பர்.உறுதி.

Health என்பதைக் குறிக்க 'நலம்' என்னும் அருமையான எளிய செந்தமிழ்ச்சொல்லிருக்க,நமக்கெதற்கு இன்னொரு மொழியின் சுகாதாரமும்,ஆரோக்யமும்?.

ஒருகாலத்தில், 'Health department minister' நல்ல தமிழில்,'மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்' என்று பொருள் விளங்க,உணர்வு பொங்க போற்றப்பட்டதை மறந்து விடமுடியாது.
ஆனால்,
இன்று அவர் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகிவிட்டார்.

   பிறரின் சூழ்ச்சியாலும்,நம்மவரின் அறியாமையாலும் தமிழரின் நலமும்,நலவாழ்வும் 'சுகாதாரம்' என்று வடமொழியாக்கப்பட்டிருக்கிறது.

நம் அன்னைத் தமிழின் அழகு குலையவும்,சிறப்பு சிதையவும் நாமே துணைநிற்கலாமோ?

இனிமேலாயினும்,
'Health' என்பதை 'சுகாதாரம்' என்று சொல்லாமல், 'நலம்' என்றும்,  இடத்திற்கேற்ப 'நலவாழ்வு' என்றும் நல்லதமிழில் குறிப்போம்.

நாம் விழித்துக் கொண்டால், நம்மொழி பிழைத்துக் கொள்ளும்.

நன்றி.

           தமிழன்புடன்,
         மனோ.சேவியர்,
             மணப்பாடு,
             27.04.2020.

Saturday, 25 April 2020

தனித்தமிழ் அறிவோம்...

கண்ணாடி அல்ல ... கண்ணடை

செந்தமிழ்த்தேன்
🍇🍇🍇🍇🍇🍇🍇

துளி : 63

தமிழன்பர்களே,
வணக்கம்.

      மூக்குக்கண்ணாடி

'Spectacles' என்பதற்கு 'மூக்குக்கண்ணாடி' என்பதுதான் முறையான தமிழ்ச்சொல்லா?

கண்ணுக்கு உதவும் கண்ணாடிக்கு, மூக்கு எதற்கு முன்னாடி?

மூக்கு மட்டுமா முட்டுக் கொடுக்கிறது?.காதுகளும் தானே கைகொடுக்கின்றன?

என்றால்,செவிக்கண்ணாடி என்றும் செப்பலாமன்றோ?

மூக்குக்கண்ணாடியா?
செவிக்கண்ணாடியா?
செவ்வையான தமிழாக்கம் எது?

அதற்கு முன்னால்,
கண்ணாடி குறித்த, சொல்லாண்மை தேடிச் சற்றுப் பின்னாடி போவோம்.

உருவங்காட்டும் பொருளைப் பழந்தமிழர் 'ஆடி' என்றழைத்தனர்.

'கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல'- சங்க இலக்கியம்.

வள்ளுவர் காலத்தார், ஆடியைப் 'பளிங்கு' எனவும் வழங்கினர்.

'அடுத்தது காட்டும் பளிங்குபோல்' - திருக்குறள்.

ஆடிக்கும்,பளிங்குக்கும்
அடுத்து வந்தசொல் கண்ணாடி.

பளிச்சிடும் கண்ணாடியையும் பருகிடும் குவளையையும் 'Glass' என்றது ஆங்கிலம்.

அந்தக் கண்ணாடியால் செய்யப்பட்ட குவளையை 'கண்ணாடி கிளாஸ்' என்பது தமிங்கிலம்.

பொதுவான கண்ணாடி 'Glass'.
உருவங்காட்டுவது 'Mirror'.
கண்ணுக்கு உதவுவது 'Spectacles'.

இந்நுட்பமறிந்த தமிழனுக்கு,பேச்சுவழக்கில் மூன்றுமே கண்ணாடிதான்.

ஆனாலும்,மூன்றாம் கண்ணாடியை மூக்குக்கண்ணாடி என்கின்றோம்.

அது முழுமையான பொருளை உணர்த்துகின்றதா என்பதே இந்தத்தேடல்.

மூக்குக்கண்ணாடிக்கு முறையான தமிழ்ச்சொல் முத்தமிழில் இருந்தது.

சேரன் பிரிந்தபோது அது கேரளம் சென்றுவிட்டது.

பொருட்செறிவுள்ள அருந்தமிழ்ச் சொல் அது.

அதுதான், 'கண்ணடை' ( കണ്ണട ) என்பது.

அடை என்பதற்கு அரும்பொருள்கள் பலவுண்டு.

செம்மையாக இல்லாத ஒன்றைச் செம்மையாக்குதற்காகக் கொடுக்கப்படும் உதவிப் பொருளையும் 'அடை' என்பர்.

கண்களில் காட்சித்திறன் தளரும்போது,அதைச் செம்மையாக்க, கண்களுக்கும் ஓர் அடைகொடுத்தல் வேண்டும். அந்த அடைதான் கண்ணாடி.

      கண்ணுக்கு அடையாக உதவுகின்ற கண்ணாடியைக் 'கண்ணடை' என்றனர் கன்னித்தமிழர்.

பொருட்செறிவுடைய பொருத்தமான இந்தச் செந்தமிழ்ச்சொல், இன்று நந்தமிழ் நாட்டு வழக்கிலில்லை.

ஆனால்,மலையாள நாட்டார் இம்மாத்தமிழ்ச் சொல்லை மறந்துவிடாமல், மூக்குக்கண்ணாடியுடன் போற்றி வருகின்றனர்.

'மூக்குக்கண்ணாடி' என்று எட்டெழுத்துகளால் நீட்டி ஒலித்திடக் கிட்டாத சொல்லின்பம்,
'கண்ணடை' என நான்கெழுத்துகளால் குறுக்கி ஒலித்திடக் கிட்டுகிறதன்றோ!

நன்றி.

               அன்புடன்,
          மனோ.சேவியர்,
              மணப்பாடு,
               24.04.2020.

Saturday, 18 April 2020

தனித்தமிழ் அறிவோம்

இருவாச்சி அல்ல இருவாய்ச்சி

செந்தமிழ்த்தேன்
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇

துளி : 62

தமிழன்பர்களே,
வணக்கம்.

         இருவாய்ச்சி

ஒருவகை மலருக்கும், இன்னொரு பறவைக்கும் தமிழர் வைத்த பெயர்தான் 'இருவாய்ச்சி'.

ஏன் அப்படி அமைத்தார்கள் பார்ப்போமா?

'உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா' என்னும் திரைவரிகளால்  நமக்குத் தெரிய வருவது,

பூவும் மலரும்.பூப்போன்ற வாயும் மலரும் என்பதே.

வாயில் விரியும் உதடுகளை இதழ்கள் என்றால்,
பூவில் சிரிக்கும் இதழ்கள், பூவுக்கு உதடுகள் தானே?

பூவின் இதழோ?
பூவையர் உதடோ? அல்லது பறவையின் அலகோ?

எதுவாயிருப்பினும் பொதுவாய் அது வாய்.

வாயை உடையவன் வாயன்.
வாயனுக்குப் பெண்பால் வாய்ச்சி. 

வாய்ச்சி சரி.
அது என்ன இருவாய்ச்சி?

வாய்ச்சிக்கு முன்னால் இரு ஏன் இருக்கிறது?

இலக்கியங்களில் தேடுவோம்.

"இரும்புலிக் கொன்று பெருங்களிறு அடூஉம்"- பதிற்றுப் பத்து.

"இருங்கடல் உடுத்த இவ்வையத்து"- புறநானூறு.

"இருங்களிற்று இனநிரை குளிர்ப்ப வீசிப்"- அகநானூறு.

"இற்பிறப்பு என்பதொன்றும் இரும்பொறை என்பதொன்றும்"-  கம்பராமாயணம்.

"இருநிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே"-  வெற்றி வேற்கை.

மேற்கண்ட இலக்கியத் தொடர்களின் வாயிலாக 'இருமை: என்பது 'பெரிய' என்னும் பொருள் தருவதைக் காணலாம்.

இருமை+வாய்ச்சி=இருவாய்ச்சி.
அஃதாவது,
'பெரிய வாயை உடையவள்' என்பது பொருள்.

ஆங்கிலத்தில் Hornbill(Bucerotidae) எனப்படும் பெரிய அலகுடைய பறவைக்குத் தமிழன், இருவாய்ச்சி எனச் செந்தமிழ்ப் பெயரிட்டான்.

மந்தாரை இனத்துக் குறுமரமொன்றில், மற்ற மலர்களிடமிருந்தும் வேறுபட்ட ,பெரிய இதழ்களையுடைய மலர்கள்,மலர்தலைக் கண்ட அவனே, அம்மலரையும் இருவாய்ச்சி என்றான்.

மல்லிகை இனத்தில் Tuscan Jasmine என்னும் வகைக் கொடியில், நீண்ட இதழ்களைக் கண்டவுடன்,அதனையும் "இருவாய்ச்சி மல்லிகை" என்னத் தொடங்கினான்.

காலப்போக்கில் இருவாய்ச்சியானது, இருவாச்சியாகக் குறுகிப் போனது.

தூத்துக்குடி மேல்மாந்தையில் அருள்மிகு பெரியாண்டவரோடு உடனுறையும், அருள்மிகு பெத்தநாச்சி அம்மையைச் சிலர், 'பெத்தனாட்சி' என்றும் எழுதுவர்.

அதுபோல்,
அழகிய செந்தமிழ்ச் சொல்லாகிய இருவாய்ச்சியைத் தமிழர் சிலர், 'இருவாட்சி' என்றும் குறிப்பிடுகின்றனர்.

அது தவறு.

பூவாகட்டும்.புள்ளாகட்டும்.

இருவாட்சி தவறான சொல்லாட்சி!
இருவாய்ச்சி என்பதே தமிழ்மாட்சி!

நன்றி.

               அன்புடன்,
         மனோ.சேவியர்,
              மணப்பாடு,

              18.04.2020.