Saturday, 18 April 2020

தனித்தமிழ் அறிவோம்

இருவாச்சி அல்ல இருவாய்ச்சி

செந்தமிழ்த்தேன்
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇

துளி : 62

தமிழன்பர்களே,
வணக்கம்.

         இருவாய்ச்சி

ஒருவகை மலருக்கும், இன்னொரு பறவைக்கும் தமிழர் வைத்த பெயர்தான் 'இருவாய்ச்சி'.

ஏன் அப்படி அமைத்தார்கள் பார்ப்போமா?

'உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா' என்னும் திரைவரிகளால்  நமக்குத் தெரிய வருவது,

பூவும் மலரும்.பூப்போன்ற வாயும் மலரும் என்பதே.

வாயில் விரியும் உதடுகளை இதழ்கள் என்றால்,
பூவில் சிரிக்கும் இதழ்கள், பூவுக்கு உதடுகள் தானே?

பூவின் இதழோ?
பூவையர் உதடோ? அல்லது பறவையின் அலகோ?

எதுவாயிருப்பினும் பொதுவாய் அது வாய்.

வாயை உடையவன் வாயன்.
வாயனுக்குப் பெண்பால் வாய்ச்சி. 

வாய்ச்சி சரி.
அது என்ன இருவாய்ச்சி?

வாய்ச்சிக்கு முன்னால் இரு ஏன் இருக்கிறது?

இலக்கியங்களில் தேடுவோம்.

"இரும்புலிக் கொன்று பெருங்களிறு அடூஉம்"- பதிற்றுப் பத்து.

"இருங்கடல் உடுத்த இவ்வையத்து"- புறநானூறு.

"இருங்களிற்று இனநிரை குளிர்ப்ப வீசிப்"- அகநானூறு.

"இற்பிறப்பு என்பதொன்றும் இரும்பொறை என்பதொன்றும்"-  கம்பராமாயணம்.

"இருநிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே"-  வெற்றி வேற்கை.

மேற்கண்ட இலக்கியத் தொடர்களின் வாயிலாக 'இருமை: என்பது 'பெரிய' என்னும் பொருள் தருவதைக் காணலாம்.

இருமை+வாய்ச்சி=இருவாய்ச்சி.
அஃதாவது,
'பெரிய வாயை உடையவள்' என்பது பொருள்.

ஆங்கிலத்தில் Hornbill(Bucerotidae) எனப்படும் பெரிய அலகுடைய பறவைக்குத் தமிழன், இருவாய்ச்சி எனச் செந்தமிழ்ப் பெயரிட்டான்.

மந்தாரை இனத்துக் குறுமரமொன்றில், மற்ற மலர்களிடமிருந்தும் வேறுபட்ட ,பெரிய இதழ்களையுடைய மலர்கள்,மலர்தலைக் கண்ட அவனே, அம்மலரையும் இருவாய்ச்சி என்றான்.

மல்லிகை இனத்தில் Tuscan Jasmine என்னும் வகைக் கொடியில், நீண்ட இதழ்களைக் கண்டவுடன்,அதனையும் "இருவாய்ச்சி மல்லிகை" என்னத் தொடங்கினான்.

காலப்போக்கில் இருவாய்ச்சியானது, இருவாச்சியாகக் குறுகிப் போனது.

தூத்துக்குடி மேல்மாந்தையில் அருள்மிகு பெரியாண்டவரோடு உடனுறையும், அருள்மிகு பெத்தநாச்சி அம்மையைச் சிலர், 'பெத்தனாட்சி' என்றும் எழுதுவர்.

அதுபோல்,
அழகிய செந்தமிழ்ச் சொல்லாகிய இருவாய்ச்சியைத் தமிழர் சிலர், 'இருவாட்சி' என்றும் குறிப்பிடுகின்றனர்.

அது தவறு.

பூவாகட்டும்.புள்ளாகட்டும்.

இருவாட்சி தவறான சொல்லாட்சி!
இருவாய்ச்சி என்பதே தமிழ்மாட்சி!

நன்றி.

               அன்புடன்,
         மனோ.சேவியர்,
              மணப்பாடு,

              18.04.2020.

No comments:

Post a Comment