Sunday, 25 September 2022

காந்தக் குரலோனுக்குக் கவிதாஞ்சலி


என்னோடு பாட்டுப் பாடுங்கள்

காந்தக் குரலினால் கேட்போரை ஈர்த்து
சாந்தம் மிகப்பெற்று சங்கதியும் சேர்த்து
தீந்தமிழ் சொல்லிலே திகட்டா இசைகோத்து
மாந்திட வழிகூட்டிய மன்னவரே மணியரே

அம்மாவின் அன்பையும் அரவணைக்கும் பண்பையும்
இம்மாநிலம் உரைத்ததோ இனியநும் குரலிசையே
எம்மாந்தர் கேட்டாலும் ஏந்திநின்று இதயத்திலே
கும்மாளம் இடச்செய்யும் குதூகலக் குரலோனே

இசைக்கு மயங்கார் இவ்வுலகில் இல்லையென
இசைகூட்டிய சொல்வளம் இனியவனே உனதன்றோ!
திசைமாறிய பறவைக்கும் தித்தித்த உனதுகுரல்
பசைகூட்டி வாழ்வினிலே பற்றுகொள்ளச் செய்ததுவே

தேனினும் இனியநல் திருவாசகம் அனையவே
வானினும் உயர்ந்தோங்கிய வனப்புமிகு இசையாலே
வையக்கத்துள் வாழ்ந்துவரும் வனப்புமிகு வான்நிலவே
வையகம் உள்ளவரை வாழ்வாங்கு வாழியவே


செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

Saturday, 24 September 2022

என்ன தவம் செய்தேனோ

 


என்னதவம் செய்தேனோ.!

பள்ளிக்காலம் முடிந்து பாரினில் எழுந்து/
தெள்ளிய சிந்தனையால் திசைதேடிச் சென்று/
முள்ளான பாதைகளில் முட்டியினால் தவழ்ந்து/
வெள்ளிடை மலையென வியனுலகில் சிறந்திடவே/

கல்வியைக் கரம்பற்றி கரையிலா நூல்கற்று/
வல்வினை ஓட்டியே வலியதோர் நிலைநாட்டி/
அல்லல்கள் நீக்கிடவே அறிவினைக் கைக்கொண்டு/
நல்லதோர் நிலைகண்ட நலவாழ்வு மிகவுண்டு/

தீயினிலே மிகவுழன்று தேநீரும் விற்றலைந்து/
தீயணைப்புத் துறைதனிலே தீநாவின் சுற்றளந்து/
தீயினாற் சுட்டிடா திறமிகு சொல்வன்மை/
சேயிடை கூறிடவே சீர்மிகு ஆசானானேன்/

குடிசையிலே பிறந்து கோபுரமாய் நிமிர்ந்து/
விடியுநிலை தெரிந்து வியனுலகில் சிறந்து/
துடிப்பாக எழுந்திட்டு துயரங்கள் மறந்து/
பிடிப்பிலாது எழுந்திட என்னதவம் செய்தேனோ.?/

செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


Friday, 23 September 2022

நீடுதுயில் நீக்கவந்த நிலா


 

நீடுதுயில் நீக்கவந்த நிலா


பாட்டுக்கொரு புலவனாய் பாரினில் உதித்து/

ஏட்டுக்குநற் கவிஞனாய் எழிலாய் எழுந்து/

நாட்டுக்கொரு தலைவனாய் நிமிர்ந்தே சிறந்து/

நாட்டினார் புகழ்க்கொடி நற்றமிழால் நல்லபடி/


அறியாமை நீங்கிடவே ஆற்றல்மிகு சொல்லோவியம்/

செறிவாகத் தந்தவரே சீற்றமுடன் உரைத்தவரே/

குறிபார்த்துப் பெண்ணினத்தை கூட்டுக்குள் அடைத்தோரை/

வெறிகொண்டு விரட்டிடவே வண்டமிழ் பகர்ந்தவரே/


தளைதனில் சிக்கிநின்ற தீந்தமிழின் வீரியத்தைத்/

துளைமீண்டு தென்றலாய்த் தேனூறும் இசையாக/

முளைத்திட முட்டிநிற்கும் முற்றியதோர் விதையாக/

விளைந்தநற் புதுக்கவியாய் வியனுலகில் படைத்தவரே/


எண்ணத்தைக் காவியமாய் ஏத்திடும் எல்லோரையும்/

திண்ணிய நெஞ்சுடனே தீரமிக்க கவிவடிக்கப்/

பண்ணிய பாவலனே பைந்தமிழ்ச் சூரியனே/

எண்ணிலாக் கவிகளின்று எழுதுவதே உன்ஒளியில்... /


செந்தமிழ்ச்சுடர்

அ.செலஸ்டின் மகிமை ராஜ்

வேம்பார்

குறும்பா


 

கோபுரக் கவிதை


ஆகாயக்குடையுள்/
ஆக்கிரமித்த இருளகற்றி/
ஆட்சிசெய்யக் கடுகிவா கதிரவனே/
ஆற்றல்மிகு கரங்காண/
ஆவலோடு/


செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

Thursday, 22 September 2022

சிலந்தி வலை


உறைவிடத்தால் உணவுகூட்டி/
ஊருக்கே முயற்சிகூட்டி/
பகிர்தலையும் புவிக்கூட்டும் பட்டுச்சிலந்தி/

அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

அமைதி வேண்டி


பெருவிரலாய்ப் பிரிந்திடாது/
சிறுவிரலாய் ஒன்றுவோம்/
அமைதி நம்மிலிருந்து அகிலத்திற்கு...

அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்