Monday, 19 September 2022
கலாச்சாரத்தில் தொடுப்போம் கவிச்சரம்
வேற்றுமையில் ஒற்றுமை
வேற்றுமையில் ஒற்றுமை
தள்ளாடும் நிலையில் தவித்திடும் ஒருவனும்
துள்ளிடும் நிலையில் துடித்திடும் ஒருவனும்
வெள்ளமாய் மடைதிறந்து விளம்பிடும் ஒருவனும்
பள்ளமாய் தாழ்ந்திட்டு புலம்பிடும் ஒருவனும்
கள்ளத்தை அகங்கொண்ட கறையுடை ஒருவனும்
உள்ளத்தை வெண்மையாய் உரித்தாக்கும் ஒருவனும்
தெள்ளிய சிந்தனையால் திசைகாட்டும் ஒருவனும்
முள்ளாகச் சிந்தித்து முடக்கிடும் ஒருவனும்
உள்ளத்தால் ஒன்றுபட்டு உலகத்தால் ஒன்றிணைந்து
வெள்ளைமணம் கொண்டிங்கு வியத்தகு செயல்களாலே
வள்ளைப்பாட்டு பாடிடும் வனப்புமிகு உழத்தியர்போல்
புள்ளாகப் பறந்திங்கே பூங்குயிலாய் உலாவருவர்
அள்ளக்குறையா அமுதமென ஆற்றல்சேர் கல்விதனை
தள்ளாடிடும் பருவத்திலும் தாங்கிநிற்கும் செல்வந்தனை
அள்ளியள்ளித் தந்திடும் அழகியதோர் கல்விக்கூடமாம்
பள்ளியே வேற்றுமையில் ஒற்றுமைக்கு உறைவிடமாம்
செந்தமிழ்ச்சுடர் அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்
Sunday, 18 September 2022
எமக்குத் தொழில் கவிதை
*எமக்குத் தொழில் கவிதை*
நல்லதைச் சொல்லி நானிலம் போற்றிட/
அல்லதைச் சொல்லி அறவே நீக்கிட/
சொல்லிடும் சொல்லை வெல்லும் சொல்லாய்/
சொல்லிடும் மறவரே செந்தமிழ்க் கவிஞர்/
அறத்தை வலியுறுத்தி ஆன்றதோர் வழிசமைத்து/
நிறத்தால் மொழியால் நிந்தனைச் செயல்களால்/
சிறுத்த மனத்தினராய் சிந்தைகெட்ட மானிடரைச்/
சிறுத்தையாய்ப் பாய்ந்து சீர்படுத்தும் நெறியாளர்/
அறிவுரை கூறிநல் அன்புவழி காட்டிடும்/
நெறிதனைச் செய்திட நானிலம் செதுக்கிட/
சிறியோரை உளிகொண்டு சிற்பமாய் வடித்திட/
அறிவினால் சொல்கூட்டி அணிசெய்யும் சிற்பி/
அருந்தமிழ் வீரராய் ஆக்கப்பணி செய்திட்டு/
மருந்தையும் இனியதாய் மனங்கவரத் தந்திட்டு/
பருந்தினும் மேலாகப் பாரினை வலம்வந்து/
விருந்தாய் நற்றமிழ் விழிகூட்டும் கவிஞராம்/
எமக்குத் தொழில் கவிதை...
எந்நாளும் விதைப்போம் அதை...
செந்தமிழ்ச்சுடர் அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்
Saturday, 17 September 2022
தந்தை பெரியார்
தந்தை பெரியார்
மாயோனின் மகத்துவம்
புண்ணியந்தரு காசியினிலே புனிதராய் உதித்து/
கண்ணியமிகு கடவுளரையும் கடிந்தே எதிர்த்து/
பெண்ணியம் போற்றிட்ட பெருமைமிகு மாமணியே/
திண்ணிய போராட்டங்களால் தீரரான நன்மணியே/
திராவிடக் குழந்தையாம் தெலுங்கதனைப் பேசினாலும்/
தீர்ந்திடா அன்புடைய தமிழன்னையின் ஆசியோடும்/
ஆர்த்திடும் சிந்தனையால் ஆன்றதோர் முன்னெடுப்பால்/
கோர்த்திட்ட சீர்திருத்தம் குவலயத்தால் போற்றப்படுதே/
தீண்டாமைக்குத் தீவைத்து தீவிரமாய் எதிர்த்தவரே/
ஆண்டவர்களின் அடக்குமுறை அடியோடு மிதித்தவரே/
மாண்டிடும் நிலைமட்டும் மரியாதைக் குறைவிலாது/
மீண்டிடத் தூண்டியவரே மேன்மையுற வேண்டியவரே/
சாதியென்னும் சாக்கடையுடன் சமத்துவமிலாச் சதிபடைத்த/
சிறியாரை முடக்கிடவே சீற்றமுடன் எழுந்தவரே /
பெரியாராய் நின்றிலங்கி பீடுறவே நிமிர்த்திட்டு/
புரிந்திட்ட சாதனைகளால் புவியுள்ளவரை வாழ்வீரே.! /
*செந்தமிழ்ச்சுடர்* அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்
Thursday, 15 September 2022
வறுமை ஓட்டி வளமை கூட்டுவோம்
காணொளியும் கவிவரியும்
வறுமை ஓட்டி வளமை கூட்டுவோம்
உண்டிதனைக் கொடுத்தோர் உயிரினைக் கொடுத்தோராய்/
கண்டித்துக் கூறிநின்ற கடந்திட்ட காலத்தவராய்/
பண்டியை நிரப்பிடப் பாடுபட்ட நாட்கள்போய்/
கண்டவிடம் வீசிநிற்கும் கயவர்களை என்செய்ய.../
எலும்புடன் தோலொட்டி எழவியலா மாந்தர்களாய்/
உலுக்கிடும் நிலைதந்து உருக்குலைக்கச் செய்தவராய்/
பலுகியே பெருகிடவும் பங்கிடவும் உணவில்லா/
வலுவற்ற மாந்தர்களும் வாழ்கின்ற உலகமிது/
வலியவராய் உடல்வளர்க்கும் வல்லவர்கள் ஒருபக்கம்/
மெலியவராய் உருக்குலைந்து மடிபவர்கள் மறுபக்கம்/
பலியிடும் நிலைமீட்டு பசியினைப் போக்கிடவே/
புலியெனப் புறப்படுவீர் புரட்சிசெய் தோழர்களே/
இருப்பவர் கொடுத்து இல்லாரை நிரப்பாவிடினும்/
இருப்பதை வீணாக்காது இனியதோர் நிலைகொண்டால்/
பொருப்பாய் மண்ணிலே பீடுறவே நிமிர்ந்து/
வறுமையை ஓட்டலாம் வளமையைக் கூட்டலாம்/
செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்
Thursday, 19 May 2022
மும்மொழித் தமிழே
*மும்மொழித் தமிழே*
முத்தமிழாய் இயல் இசை நாடகமென/
முக்கனியாய் மா பலா வாழையென/
முப்பாலாய் அறம் பொருள் இன்பமென/
முக்காலமாய் நேற்று இன்று நாளையென/
மும்மொழியாய் தனி தொடர் பொதுமொழியென /
எம்மொழியும் பெறா எழிலைப் பெற்றவளே/
தொகைமொழியுள் நின்றே தொன்மை காத்தவளே/
பகைமொழியின் முன்னே பரிவை வளர்த்தவளே/
முந்நீர் கடந்தும் முகிழ்த்தே நின்று/
செந்நீர் சொறிந்தும் செம்மை காத்து/
கண்ணீர் களைந்து காவியம் படைத்து/
திண்ணிய நெஞ்சுடன் திசைகாட்டிய தீந்தமிழே/
ஆண்டுகள் பல்லாயிரம் அற்புதமாய்க் கடந்து/
பாண்டியன் மகளாய்ப் பாங்குற நடந்து/
ஆண்டவன் நாவிலும் அமுதமாய் உறைந்து/
தாண்டவ மாடிடும் தனித்தமிழே வாழியவே/
செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்
Monday, 9 May 2022
பெண்களே,விழிப்போடு இருங்கள்...
*👍🏽காவல்துறையின் எச்சரிக்கை💪🏼*
இந்திய தண்டனைச் சட்டம் 233ன் படி
ஒரு பெண் ஏதாவதொரு சூழ்நிலையில் கயவர்களிடம் மாட்டிக் கொண்டால் அவள் பாலியல் வன்கொடுமைக்கோ அல்லது வேறுவிதமான துன்பங்களுக்கோ,ஆட்பட நேரலாம், அதற்கான வாய்ப்புக்களும் அதிகம்...
தன்னைத் தாக்கியவரைத் திருப்பித் தாக்கி மரணம் ஏற்படுத்த அப்பெண்ணுக்கு உரிமை உண்டு, அப்படிச் செய்யும் பட்சத்தில், அச் செயல் கொலைக் குற்றமாகாது...
இக்கட்டான இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சமயோசிதமாகத் தப்பிக்க சிலவழிகள்...
1) இரவு வெகுநேரம் உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள லிப்ட்டில் ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனியாகச் செல்ல நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும் ?
*நிபுணர்கள் கூறுகிறார்கள்*
நீங்கள் பல தளங்களைத் தாண்டி உங்கள் தளத்தை அடைய வேண்டும் , நீங்கள் சேருமிடம் வரை உள்ள அனைத்து தளங்களிலும் நின்று செல்லுமாறு அனைத்து பட்டன்களையும் அழுத்தவும்.
ஒவ்வொரு தளத்திலும் நின்று செல்லும் லிஃப்டில் யாரும் உங்களைத் தாக்கத் துணிவதில்லை ...
2) நீங்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது அந்நியன் உங்களைத் தாக்க முயன்றால் என்ன செய்வது ...
*நிபுணர்கள் கூறுகிறார்கள்*
சமையலறைக்கு ஓடுங்கள்,
மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கத்தி, தட்டு, இவை எங்கு இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும்,
இவை அனைத்தையும் கொடிய ஆயுதங்களாக மாற்றலாம்,
வேறு ஒன்றுமே இல்லை என்றாலும், தட்டுக்களையும் பாத்திரங்களையும் வீசத் தொடங்குங்கள்.
அவர்களை எதிர்த்து கூச்சல் போடுவதால் உண்டாகும் சத்தம் ஒரு கொடுமைக்காரனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்....
அவன் பிடிபட விரும்பமாட்டான் என்பதால் அவன் தப்பிக்கவே முயல்வான்...
3) இரவில் ஆட்டோ அல்லது டாக்ஸியில் செல்லும்போது:
*நிபுணர்கள் கூறுகிறார்கள்*
இரவில் ஆட்டோவில் ஏறும் முன், முதலில் அதன் பதிவு எண்ணை செல்லில் பதிவு செய்தபின்
உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பரை அழைக்கவும்,
டிரைவருக்குப் புரியும்படி வீட்டாரிடம் விவரங்களை கூறவும்....
உங்கள் அழைப்பிற்கு யாரும் பதிலளிக்காவிட்டாலும், நீங்கள் உரையாடலில் இருப்பது போல் பாசாங்கு செய்யுங்கள் ... தம்மைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் உங்களிடம் இருப்பதை ஓட்டுநர் அறிந்துகொள்வார்,
ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை உணரும் டிரைவர்
உங்களைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்வது இப்போது அவர் பொறுப்பு என்று உணர்ந்து தாக்கும் எண்ணத்தை கைவிட்டு இப்போது உங்கள் உண்மையான பாதுகாவலராக மாறிவிடுவார்.
4) ஓட்டுனர் பாதையை மாற்றினாலோ, அல்லது
நீங்கள் ஆபத்து மண்டலத்திற்குள் நுழைவது போல் உணர்ந்தாலோ என்ன செய்வது ...
*நிபுணர்கள் கூறுகிறார்கள்*
உங்கள் பையின் கைப்பிடி அல்லது துப்பட்டாவில் அவரின் கழுத்தில் சுற்றி அவரைப் பின்னால் இழுக்கவும்.
சில நொடிகளில், அவர் மூச்சுத் திணறல் மற்றும் உதவியற்றவராக உணருவார் ...
உங்களிடம் பை அல்லது சால்வை இல்லையென்றால், அவரது சட்டைக் காலரை பிடித்து இழுக்கவும். அவரது சட்டையின் மேல் உள்ள பட்டனும் அவன் கழுத்தை நெறிப்பதால், அவர் நிலை தடுமாறும் வேளையில் நீங்கள் தப்பித்து விடலாம்.
5) ஒரு அந்நியன் இரவில் உங்களைப் பின்தொடர்ந்தால் ...?
*நிபுணர்கள் கூறுகிறார்கள்*
அருகாமையில் இருக்கும் கடை அல்லது வீட்டிற்குள் நுழைந்து உங்கள் நெருக்கடியை விளக்குங்கள்,
இரவில் கடைகள் திறக்கப்படாவிட்டால்,
ஒரு ஏடிஎம் மையத்திற்குள் செல்லுங்கள்... ஏடிஎம் ல் எப்பொழுதும் க்ளோஸ் சர்க்யூட் கேமரா இருக்கும்;
அடையாளம் கண்டுகொள்வோம், என்ற பயத்தில் உங்களைத் தாக்கத் துணியமாட்டார்கள்...
*உங்கள் கைப்பையில் எப்போதும் ஒரு விசில் வைத்திருங்கள் , ஆபத்து சமயத்தில் அதை ஊதும் போது சைகலாஜிகலாக விசில் சத்தத்திற்கு யாருமே பயப்படுவார்கள்...*
*“அனைத்திற்கும் மேலாக"*
*மனதளவில் விழிப்புடன் இருப்பது முக்கியம்*
*உங்களிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம் உங்களின் தைரியம்*
சமூக மற்றும் தார்மீக நோக்கத்திற்காகவும், பெண்களின் பாதுகாப்பிற்காகவும் நாம் செய்யக்கூடியது, இத்தகவலைப் பகிர்வது மட்டுமே ...
🌹நட்புக்களே, இதை நம் தாய்மார்கள், சகோதரிகள், மனைவி, மற்றும் தோழிகளுக்கும் தெரியப்படுத்துங்கள்...🙏🏼



