Wednesday, 16 November 2022

ஊக்கமது கைவிடேல்

 


*ஊக்கமது கைவிடேல்*

ஆயிரம் தோற்ற அபூர்வ மனிதர்/

பாயிரம் போற்றப் படைத்த புனிதர்/

சாய்தல் கண்டு சோர்ந்து போயின்/

ஓய்தல் ஒன்றே உறையுள் ஆகும்/


உள்ளிருந் துடைபடா உலகத் துயிர்கள்/

வெள்ளிடை மலையாய் வெற்றி காணா/

தெள்ளிய சிந்தனையும் தீர்க்க முடிவுமே/

துள்ளிய வெற்றியைத் துவளாது தந்திடும்/


கடைசி அடிக்குமுன் கடலளவு பட்டாலும்/

படைப்பின் ஓவியமாய் பாங்குடை சிலைவாரா/

துடைத்து விடைத்தெழு துளியும் பலனாகும்/

மடைஉடை வெள்ளமாய் மங்காப் புகழ்சேரும்/


முயற்சிகை விட்டாலும் முயற்சி கைவிடாமலே/

பயிற்சியும் பாங்குடை புதியநல் முயற்சியோடே/

அயர்ச்சியைப் போக்கினால் அகிலமே ஆளலாம்/

தயக்கமதை நீக்கியே தரணியும் வெல்லலாம்/


செந்தமிழ்ச்சுடர் அ.செலஸ்டின் மகிமை ராஜ்

வேம்பார்

கருவேல மரம்

 


நீர்தேடி நிலந்தனில் நெடுந்தொலை சென்றங்கே/
வேர்கூடி நீரினையே வியத்தக்க மேலேற்றி/
பார்தணிக்கப் பகிர்ந்திடு பண்புடை *கருவேலம்*/
சீர்கொண்ட பணக்காரர் செய்திடுவார் கருவூலம்/

அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்

Friday, 4 November 2022

விந்தைமிகு வியாழன்

 விந்தைமிகு வியாழன்

=====================

கடுகுசந்தை அரசு உயர்நிலைப்பளளியின் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்களுக்குப் புதிய மனிதர் ஒருவர் ஆசிரியர்களோடு கலந்து நின்றார். வழக்கமான காலை வழிபாட்டுக் கூட்டம் நிறைவுபெற்று, அந்த வாரத்தில் தினமலர் பட்டம் இதழுக்கான வினாடிவினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவச் செல்வங்களுக்கான புத்தகப்பரிசு வழங்கிட தமிழாசிரியர் அழைத்தபோதுதான் அனைவருக்கும் வியப்பு காத்திருந்தது...  ஆம்..  பரிசு வழங்கிட மேடைக்கு வருகை புரிந்தவர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு.ஜானி டாம் வர்கீஸ் அவர்கள்... 

வினாடிவினா வெற்றியாளர்களுக்குப் புத்தகப் பரிசு வழங்கிய பின்னர் தலைமையாசிரியர் விஜய ராஜன் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மாவீரன் பகத்சிங் என்ற புத்தகத்தைப் பரிசாக வழங்கினார்.  தலைமையாசிரியரோடு ஆசிரியப் பெருமக்களும், அலுவலகப் பணியாளர்களும் கடுகுசந்தை பொதுமக்களும் அகமகிழ்ந்த தருணமது 

தொடர்ந்து மாணவச் செல்வங்களின் நலன் விசாரித்து,அவர்களது மழைக்கால விழிப்புணர்வு அறிவுரைகள்கூறினார் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள். தொடர்ந்து பாரத சாரண சாரணிய இயக்கம் குறித்துக் கேட்டறிந்து,அதன் குறிக்கோள் என்னவென மாணவர்களிடம் கேட்டார். "எப்பொழுதும் தயாராயிரு" என்ற குறிக்கோளினை மாணவர்கள் கூறியதும் அதனைச் சார்ந்து மாணவர்களோடு உரையாடி, காலை வழிபாட்டுக் கூட்டத்தில் சிறப்பித்த மாணவச் செல்வங்களையும் பாராட்டினார்.மகிழ்வோடு மதியத்தில் நடைபெற்ற குழு ஆய்விற்காகக் காத்திருந்தோம். குழு ஆய்வினையும் சிறப்பாக எதிர்கொண்டு வாழ்த்துப்பெற்ற 03.11.2022 வியாழன் வியப்பு மிகுந்ததாய் வெற்றிகரமான நாளாக அமைந்திருந்தது.

இறைவனுக்கு நன்றி💐🙏










Thursday, 27 October 2022

கடிதினில் நகரும் காலச்சக்கரம் (கடிகாரம்)

 கடிதினில் நகரும் காலச் சக்கரம்


திரைகடல் சூழ்புவியில் திக்கெட்டும் உலவிட/

நரைகூடும் நாள்மட்டும் நிற்காது விரைந்திட/

மரைபோலத் துள்ளியே மண்ணிலே ஓடிட/

தரைமீதில் விழிகூட்டி வழிகாட்டும் கடிகாரம்/


வரையிலா வரங்களால் வாழ்வெலாம் நிறைந்திட/

கரையிலா உரங்கூட்டி கறையிலாது செறிந்திட/

புரையிலாக் கண்போலப் புவிதனில் தெளிவுடனே/

விரைந்தேகி அணிசூட விதிகூட்டும் கடிகாரம்/


காலத்தைத் திட்டமிட்டு காவியம் படைத்திட/

ஞாலத்தைக் கட்டமைக்க ஞானமும் பெற்றிட/

ஆலத்தின் விழுதாகவே ஆற்றலும் அடைந்திட/

தூலத்தின் உயரம்போல் துணைசெய்யும் கடிகாரம்/


மணியுடன் நில்லாது மிகச்சிறு நொடிகூட/

பணியுடன் செறிவூட்டி பீடுபல அணிந்திட/

துணிவுடன் எழுந்திட்டு தூணாக நிமிர்ந்திட/

அணிசெய்து வாழ்வினில் அழகூட்ட வருகவே/


செந்தமிழ்ச்சுடர்

அ.செலஸ்டின் மகிமை ராஜ்

வேம்பார்


Wednesday, 28 September 2022

தாத்தாவே ஆத்தாவே உனக்காக...



தாத்தாவே ஆத்தாவே உனக்காக...

காத்தால எந்திரிச்சு காடுகரை சுத்திவந்து
பாத்தாலே உன்னோட பாசமெல்லாம் கண்ணுக்குள்ள
கீத்தாகப் பரவிடுதே குளிர்நிலவா நெறைஞ்சிடுதே
ஆத்தாளப் பெத்தெடுத்த அரும மவராணி

வாய்க்கா வரப்புல வழிந்தோடும் தண்ணீரும்
காய்க்கா மரங்கூட கனிந்தோடும் அதிசயமும்
மேய்க்கா நிலையிலுமே மாடுதரும் செல்வமுமே
அய்யா நீஇல்லாம அரக்காசு ஈட்டலயே

பள்ளிக்கூடம் போகுமுன்னே பக்குவமாப் பாத்தனுப்பி
தள்ளிக்கூட நடக்காமத் தாங்குவியே என்ஆத்தா
வள்ளியோட திருமணத்த வகையாக நான்பாக்க
துள்ளியோடி எங்கூடத் துணையாக வந்தவரே

நிழலோட அரும வெயிலுலதான் தெரியுமுன்னு
பலமுறைநீ சொன்னப்போ படிக்கலயே நான்உன்ன
நீயில்லா நேரத்துல நிழல்கூட சொல்லிடுதே
ஆத்தாவே தாத்தாவே உன்னோட பெருமைகள
வருவாயா? வரந்தருவாயா? ஏக்கத்தோடு உம்பேரன்



செந்தமிழ்ச்சுடர்
அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

Tuesday, 27 September 2022

லளழகர சிறப்பு குறும்பா


தலைமாணாக்கர் அறியாமைத்/
தளையினை அகற்றித்/
தழைத்தோங்கிடச் செய்வதே கல்வி/

தலை
தளை
தழை

செந்தமிழ்ச்சுடர் அ.செலஸ்டின் மகிமை ராஜ்
வேம்பார்


 

Monday, 26 September 2022

தெரிவை என்னும் பருவம்(பெண்)




 தித்திக்கும் தெரிவை


பெண்ணின் பருவத்துள் ஆறாம் பருவமாய்/

கண்ணின் இமைபோலக் காக்கும் பருவமாய்/ 

எண்ணியன ஈடேறும் இனிய பருவமாய்/

பண்ணினை மீட்டிடும் பருவமே தெரிவை/


இல்லறம் நுழைந்திடும் இணையிலாப் பருவமாய்/

நல்லறம் நோக்கிய நலமிகு பருவமாய்/

இல்வாழ்வில் விருந்தோம்பலில் இனிமை சேர்த்து/

எல்லோரையும் மகிழ்விக்கும் ஈடிலாப் பருவம்/


தாயாய் நின்றே தரணியைத் தாங்கிடவும்/

தாரமாய் நின்று தளர்வினைப் போக்கிடவும்/

சேயினை ஈன்றவள் சீர்பெறச் செய்திடவும்/

சோர்வினைப் போக்கியே சுகந்தரும் தெரிவை/


அன்பும் அறனும் உடையதோர் இல்வாழ்வைப்/

பண்பும் பயனுமாய்ப் பொலிவுறச் செய்துநல்/

இன்பம் பொங்கிடும் இல்லறத்தின் இளமையாம்/ 

தெரிவையைப் பாடுவோம் புகழ்மாலை சூடுவோம்/


செந்தமிழ்ச்சுடர்

அ.செலஸ்டின் மகிமை ராஜ்

வேம்பார்